740 ஆண்டுகள்:
இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 56½ மைல். காலிங்கராயன் பாளையம் அணைக்கட்டில் இருந்து பவானி ஆற்று தண்ணீரை வயல்களில் பாய்ச்சும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு இன்றுடன் 740 ஆண்டுகள் நிறைவடைகிறது. கி.பி.1,271-ம் ஆண்டு வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டு, கி.பி.1,283-ம் ஆண்டு நிறைவடைந்தது. 12 ஆண்டுகள் இந்த வாய்க்காலை வெட்டுவதற்காக தன்னையே அர்ப்பணித்தவர் காலிங்கராயன் என்ற பெருமகனார்.
கொங்கு 24 நாடுகளில் பூந்துறை நாடு, வெள்ளோட்டை தலைமையிடமாக கொண்ட பகுதியில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர் காலிங்கராயன். இவர் வாழ்ந்த காலத்தில் ஈரோடு தொடங்கி கொடுமுடி வரை வானம் பார்த்த பூமிகள்தான் இருந்தன. பசுமை போர்த்திய நிலங்களை பார்க்க முடியாது என்ற நிலை இருந்தது. காவிரி ஆறு நிலத்தை ஒட்டிக்கொண்டு சென்றாலும் பாசனத்துக்கு பயன் இல்லை. இந்த சூழலில்தான் பவானி ஆற்றில் அணைகட்டி, வாய்க்கால் வெட்டும் பெரும் யாகத்தை தொடங்கினார் காலிங்கராயன்.
அணைக்கட்டு:
கி.பி.1271-ம் ஆண்டு பணி தொடங்கிய நாளில் இருந்து, குடும்பம், உறவுகள் அனைத்தையும் விட்டு வாய்க்கால் வெட்டும் பணியிலேயே மூழ்கி கிடந்தார். அணை கட்டுவது முதல் வாய்க்கால் வெட்டுவதுவரை எத்தனை எத்தனை பிரச்சினைகள். பொங்கி பிரவாகம் எடுக்கும் பவானி ஆற்றின் வேகத்தை தடுத்து, தண்ணீரின் போக்கை திசைமாற்ற 3 வகை அணைக்கட்டுகள். ஊராட்சிக்கோட்டை மலையில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து எருமைகள் உதவியுடன் இழுத்துவந்து பவானி ஆற்றில் போட்டு தடுப்பு ஏற்படுத்தினார். எந்த காலத்திலும் தண்ணீரின் வேகத்தில் பாறைகள் அடித்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக, பாறைகளில் துளையிட்டு இரும்பை காய்ச்சி ஊற்றி கட்டிய வைத்தார். இன்றும் அவர் கட்டிய பாறைகள் சிறிதும் அசையாமல் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதுபோல் வாய்க்கால் வெட்டும் பாதையை மிக மிக எளிமையான தொழில் நுட்பத்தில், ஆனால் யாரும் சிந்திக்கக்கூட முடியாத வகையில் வளைத்து வளைத்து வெட்டி பெரும்பாலான நிலங்கள் கசிவு நீர் பெறும் வகையிலும், நீர் வேகமாக வெளியேறுவதை தடுக்கும் வகையிலும் வெட்டினார். வளைந்து வளைந்து செல்வதால் இந்த வாய்க்காலுக்கு கோணவாய்க்கால் என்ற பெயர் உண்டு.
சபதம்:
எப்படி வாய்க்காலை வெட்டுவேன் என்று அவர் சிந்தித்துக்கொண்டு இருந்த நேரம், பாம்பு ஒன்று அவர் முன்பு ஓடி வழிகாட்டியதாகவும், பாம்பு வளைந்து வளைந்து சென்றதை பார்த்து, அதையே கடவுள் விருப்பம் என்று எண்ணி இவர் வாய்க்கால் வெட்டியதாகவும் ஒரு கதை உண்டு.
இன்னும் இந்த 12 ஆண்டு காலங்களில் சொல்லொண்ணாத துயரங்கள் அனுபவித்தார். காலிங்கராயன், அவரது சொந்த தேவைக்கு வாய்க்கால் வெட்டுகிறார் என்று புறம் பேசிய மக்களும் அந்த காலத்தில் இருந்தனர். ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தனது லட்சியம், வாய்க்கால் வெட்டி முடிப்பது ஒன்றே என்ற குறிக்கோளுடன் வாய்க்கால் வெட்டி முடித்தார். 12 ஆண்டுகள் பணி முடிந்து, 1,283-ம் ஆண்டு தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. மக்கள் எல்லாம் அவரை கொண்டாடிக்கொண்டிருக்க, நானும், என் சந்ததியரும் இந்த வாய்க்கால் பாசனத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் செய்து, சொந்த மண்ணான வெள்ளோட்டில் இருந்து வெளியேறினார். ஊத்துக்குளி சென்று அங்கு புதிய ஜமீனை கட்டமைத்தார்.
அவர் கட்டித்தந்த வாய்க்கால் அவர்பெயரிலேயே அழைக்கப்பட்டது. இந்த மாபெரும் சாதனை சரித்திரம் கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசுவால் வெளி உலகத்துக்குகொண்டு வரப்பட்டது.
காலிங்கராயன் தினம்:
இன்று காலிங்கராயன் பாசனத்தால் பயன்பெறும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலிங்கராயன் தினம் கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்ந்த வெள்ளோட்டில் வைக்கப்பட்டு இருக்கும் மார்பளவு சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அவரது குலதெய்வ கோவிலான ராசாக்கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க, இந்த உலகின் மிக பழமையான இன்றும் மக்களுக்கு பாசனம் வழங்கும் மிகப்பெரிய பாசன வாய்க்காலாக விளங்கும் காலிங்கராயனை காப்பாற்றுவதிலும், அதன் பெருமையை பேணி காப்பதிலும் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் என்பதை நோக்கம்.
No comments:
Post a Comment