800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகற்கள், சிவலிங்கம் கண்டுபிடிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 January 2023

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகற்கள், சிவலிங்கம் கண்டுபிடிப்பு.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம்  அருகே பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளததை கண்டுபிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமம் உள்ளது.  இங்கு முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. விவசாய தோட்டத்தில் தற்போது புகையிலை பயிரிடப்பட்டுள்ளது. தோட்டத்தின் நடுவில் உள்ள பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்லினால் ஆன சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் மற்றும் நந்தி சிலைகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதாக கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து விவசாய தோட்டத்திற்கு வந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினர் விவசாயத் தோட்ட உரிமையாளர் முனுசாமியிடம் அனுமதி பெற்று கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்களை குழுவினர் தோண்டி எடுத்தனர். இதை எடுத்து சிவலிங்கம் சிலையை மரத்தடியில் பீடம் அமைத்து உயிர்ப்பித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர். பழமை வாய்ந்த சிவலிங்கம் சிலை மற்றும் புலிகுத்தி நடு கற்கள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 


இது குறித்து கோவை அரண் பணி அறக்கட்டளை குழுவினர் கூறியதாவது. தமிழகம் முழுவதும் மண்ணில் புதைந்து கிடைக்கும் சாமி சிலைகளை கண்டெடுத்து மீட்கும்  பணியில் கோவை அரண்மனை குழு ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கன கவுண்டன் புதூர் பகுதியில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இங்கு ஆய்வு செய்தபோது ஒரு முழுமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


சிவலிங்கம் மூன்றடி உயரமும் இரண்டடி விட்டமும் கொண்டதாகும். ஆதார பீடத்துடன் கிடைத்துள்ளது. சிவலிங்கத்திற்கு அருகில் 600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தக்கூடிய செங்கற்களும் கிடைத்தது. அதன் அருகில் மூன்று நந்திகளும் இரண்டு புலிக்குத்தி நடுகற்களும் மண்ணில் புதைந்தது கண்டெடுக்கப்பட்டது. சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் நடமாட்டம் இருந்ததும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளை இப்பகுதியிலுள்ள வீரர்கள் சண்டையிட்டு இறந்ததால் அதன் நினைவாக இது போன்ற புலி குத்தி நடு கற்கள் நடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. 


ஒரு நடு கல்லில் புலியை வீரர் ஒருவர் ஈட்டியால் குத்துவது போன்றும், அதில் வேட்டை நாய்கள் மற்றும் வீரரின் மனைவி போன்ற உருவங்களும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு நடுகலில் கூர்வாளால் புலியை குத்துவது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையாக தோண்டிருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இங்குள்ள சிவலிங்கத்திற்கு கோவை அரண்பணி அறக்கட்டளை மூலமாக மேற்கூரை மற்றும் கற்கோயில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மேலும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த நடுகற்கள் மற்றும் சிவலிங்கத்தை ஆய்வு செய்து மேலும் இதன் வரலாறுகளை முழுமையாக மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment