பவானிசாகர் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவிழா நடத்த பொதுமக்கள் சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தைப்பூச திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பவானிசாகர் - பண்ணாரி சாலையில் புதுப்பீர் கடவு பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிட மறுத்த பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்த சத்தியமங்கலம் தாசில்தார் உடனடியாக வரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த சத்தியமங்கலம் துணை தாசில்தார் விநாயகர் கோவில் திருவிழா தொடர்பாக சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும்.
அதில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் காரணமாக பவானிசாகர் - பண்ணாரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment