பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பவானிசாகரில் 5000 பேர் மேற்பட்டோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 June 2023

பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பவானிசாகரில் 5000 பேர் மேற்பட்டோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம்


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி நதியில் ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பவானிசாகரில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம்  நடைபெற்றது. பவானி நதியானது நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தோன்றி அப்பர் பவானி, பில்லூர் அணை, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணையை வந்தடைகிறது. 

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் உள்ள தனியார் காகித ஆலைகள் மற்றும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பவானி ஆற்றில் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் கருப்பு நிறத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியபடி வருவதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். 


இதனிடையே பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசன பகுதி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதி, காளிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை அருந்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்று நீரில் தனியார் ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தி சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் தொகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து  பவானிசாகர் பஸ் நிலையம் அருகே மார்க்கெட் சதுக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.எல். சுந்தரம் தலைமையில் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நிர்வாகிகள் பவானி நதியின் முக்கியத்துவம், இதில் கலக்கப்படும் ஆலைக் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாய பயிர்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினர். இதைத் தொடர்ந்து பவானிசாகர் அணை பிரிவு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். போராட்டத்தில்  பவானி நீரேற்று சங்க செயலாளர் சின்னராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஸ்டாலின் சிவக்குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  முத்துசாமி, தேசிய காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார், பாட்டாளி மக்கள் கட்சி  ராஜன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தம்பிராஜன், புரட்சிகர இளைஞர் முன்னணி  பாலு, எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் சுஹைல், அமமுக சரவணகுமார், ஆதித்தமிழர் பேரவை  பொன்னுசாமி, மக்கள் நீதி மைய நகர செயலாளர் பழனிவேல், தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர் அப்துல்லா, பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகி ஆசிப், வணிகர் சங்க தலைவர் ஜவஹர், மலர்கள் விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கொங்கு பேரவை குமார ரவிக்குமார், இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி ஜாவிட், லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி எஸ்பிஎஸ் பொன்னுசாமி, பவானி ஆற்று நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகி சுப்புரவி, ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, போராட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment