ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது :
ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில், வரும் 4 ம் தேதி ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணப் படவுள்ளன. ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 84 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. எனவே உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாதுகாப்பு இருப்பறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1 முதல் 14 வரை உள்ள அனைத்துமேசைகளிலும் வரிசை எண் குறிப்பிடப் பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு பலகையில் முறையாக எழுதப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கென வேட்பாளர் தனி வழியையும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு அலுவலர்களுக்கென தனி வழியையும் ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் பணியை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் , என்றார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment