சத்தியமங்கலத்தில் மாணவிகள் நடத்திய ஆசிரியர் தினவிழா - 2022. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

சத்தியமங்கலத்தில் மாணவிகள் நடத்திய ஆசிரியர் தினவிழா - 2022.

ரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் புனித ஜான் - டி - பிரிட்டோ மகளிர் உயர்நிலைப் பள்ளியில் (பொன்விழா கண்ட அரசு நிதி உதவி பெறும் பள்ளி) ஆசிரியர் தினவிழாவினை மாணவிகள்  மிகச் சிறப்பாக  நடத்தினர்.


சிறப்பு அழைப்பாளர்களாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சத்தியமங்கலம் கிளையின் உதவி மேலாளரும், பள்ளியின் முன்னாள் மாணவியுமான திருமிகு.பூர்விகா ரங்கராஜ் அவர்களும், சமூக ஆர்வலரும், விதைகள் வாசகர் வட்டம் செயலாளர் செ.பரமேஸ்வரன்  அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். 


10 ம் வகுப்பு மாணவிகள் இளமதி மற்றும் சௌந்தர்ய லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியினை  தொகுத்தளித்தனர். நிகழ்வின் தொடக்கமாக ஜான் - டி - பிரிட்டோ மகளிர் பள்ளி மாணவிகள் பள்ளியின் நுழைவுவாயிலில்  ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் சந்தன திலகமிட்டு  பூங்கொத்து வழங்கி வணங்கி வரவேற்றனர். 


அருட்சகோதரி சகாயமேரி FMM அவர்கள் தலைமையில் காலை 9.00 மணியளவில்  ஆசிரியர்தினவிழா  நிகழ்ச்சி தொடங்கியது. 9ஆம் வகுப்பு மாணவி பவதாரணி  அனைவரையும் வரவேற்றார்.
மாணவிகள் குழுவாக இணைந்து ஆடல், பாடல், கவிதை, நாடகம் என பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக ஆசிரியப் பெருமக்களை வணங்கியும், வாழ்த்துகள் தெரிவித்தும் சிறப்பு செய்தனர்.


காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் பயிற்றுநர்களான முன்னாள் மாணவிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆசிரியப் பெருமக்களுக்கு  வாழ்த்துரை வழங்கினர். சத்தியமங்கலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் உதவி மேலாளர் திருமிகு.பூர்விகா ரங்கராஜ் அவர்கள் ஆசிரியப் பெருமக்களின் அர்ப்பணிப்புடனான கற்பித்தலில்  ஒழுக்கமும், கல்வியும் போதித்து  அக்கறையான வழிகாட்டுதலால் தான் தன்னால் பாரத  ஸ்டேட்  வங்கியில் அதிகாரியாக பணியில் சேர முடிந்தது என்பதை நினைவுகூர்ந்து தான் பயின்ற புனித ஜான் - டி - பிரிட்டோ மகளிர் பள்ளியின்  ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துரை நல்கி  நன்றிகூறினார்.


விதைகள் வாசகர் வட்ட செயலாளர், செ.பரமேஸ்வரன் வாழ்த்துரையில், நாட்டின் உயிரோட்டமான  ஆசிரியப் பெருந்தகையினரை வணங்கிப் போற்றும் இன்றைய நல்விழாவின் அரங்கு நிறைந்த சான்றோர்களே, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களே,  மாணவச் செல்வங்களே போற்றுதலுக்குரிய ஆசிரியப் பெருமக்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்னையும், தந்தையும் நம்மை இந்த உலகத்துக்கு தருகின்றனர். ஆசிரியப் பெருமக்களோ நமக்கு இந்த உலகத்தையே தருகின்றனர். வெற்றுத்தாளாய் பள்ளிக்கூடத்தில் காலடி வைக்கும் மாணவக் குழந்தைகளை அறிவுப்பொக்கிஷமான நல்ல நூலாக வெளிக் கொணர்வது ஆசிரியப் பெருமக்கள் தாங்க. அன்னமாவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடமாடெருமை நெய்யரி அன்னர் தலை,இடை,கடை மாணாக்கர் என வகைபிரித்த நன்னூல் கூற்றுப்படி, எலி வேட்டையறியாத பூனைக்குட்டிகளாக பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை அன்போடு அரவணைத்து தேச பக்தியோடு தேசம் சார்ந்த வளர்ச்சியாகவும், சமூக அக்கறையோடு சமூகம் சார்ந்த வளர்ச்சியாகவும் நாட்டிற்கான நல்ல மனித வளங்களாக ஆசிரியர்கள் தாங்க  மாற்றுகின்றனர். 


அதாவது சிறந்த ஆசிரியர்களையும் உருவாக்குகின்றனர். எதிர்கால இந்தியாவுக்கான சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும், அறிவியலாளர்களையும், ஆட்சியர்களையும், ஆட்சியாளர்களையும், உருவாக்குகின்றனர். 


சமூகத் தேவைகளான கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை, வங்கித்துறை, மருத்துவத்துறை, பொறியாளர்துறை, பொருளாதாரத் துறை, உள்ளிட்ட பல்வகை துறைகளின் மேலாண்மை வல்லுநர்களையும் உருவாக்குகின்றனர்.


ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி!  என்ற வட்டாரச் சொல்லுக்கேற்ப கற்பித்தல் தொழிலில் தம்மையே அர்ப்பணித்து மாணாக்கர் மதிப்பெண் பெறவும் மதிப்போடு வாழவும் கற்றுத் தருகின்றனர். இதனால் தாங்க கடந்த ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வெற்றிவேற்கை எனப்படும் நறுந்தொகை நூலில், "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என அதிவீரராம பாண்டியர் அவர்களும்  ஆசிரியமேன் மக்களைப் போற்றுகிறார். ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு உதாரணமாக கண், காது, வாய் ஆகிய முப்பெரும் புலன்களின் செயலிழந்த ஹெலன்கெல்லருக்கு ஆசிரியராக 49 ஆண்டுகள் கற்பித்து
ஹெலன்கெல்லரை பட்டதாரியாக,  உலக மேதையாக, ஐந்துமொழிப்  புலமை பெற்றவராக, 22 நூல்களை எழுதிய எழுத்தாளராக, சமூகப் போராளியாக, பேச்சாளராக, உருவாக்கியதை கூறலாம், ஆக., மாணவச் செல்வங்களே, ஆசிரியர் தினவிழாவாம் இன்றைய சிறப்புமிகுந்த நன்னாளிலே, நமது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும், தோணியாகவும், படிக்கட்டுகளாகவும் துணைநிற்கும் நமது ஆசிரியப் பெருமக்களை இருகரம் கூப்பி, தலை வணங்கி வாழ்த்துவோம்.  


இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவோம், இனி நம்ம பள்ளி ஆசிரியர்களை தினமும் கொண்டாடுவோம்! சத்தியமங்கலம் புனித ஜான் டி பிரிட்டோ மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சார்பாக
அனைத்து வகை பள்ளிகளின் ,கல்லூரிகளின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியப் பெருந்தகைகளையும் வணக்கத்துடன் போற்றி வாழ்த்துவோம் என வாய்ப்பளித்த மாணவிகளுக்கு நன்றி பாராட்டி உரையை நிறைவுசெய்கிறேன்.


என வாழ்த்தினார். தொடர்ந்து  பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் நற்பெயருக்காக  தொடர்ந்து 100 சதம் தேர்ச்சிபெற உறுதுணையாக செயல்பட்ட ஆசிரியைகளுக்கு கேடயம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும், பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.


நிறைவாக 9 ம் வகுப்பு மாணவி நிவேதா  நன்றி கூறினார். மதியம் 1.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவளித்து சுவையான  விருந்தோம்பலுடன்  ஆசிரியர்தின விழா இனிதே நிறைவுபெற்றது. 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment