ஈரோடு மாநகராட்சி, அலுவலக மேல் தளத்தில் 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் இன்று (21.02.2023) உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் திரு.க.சிவகுமார் ஆகியோர் இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணானுண்ணி இஆப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாள்தோறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், கையெழுத்து இயக்கம் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமையல் எண்ணெய் கேன் மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோபிசெட்டிபாளையம் கலைக்குழுவின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (21.02.2023) ஈரோடு மாநகராட்சி அலுவலக மேல் தளத்தில் தேர்தல் நாள் பிப்ரவரி 27, வாக்களிப்பதற்கு நிகராக எதுவும் இல்லை, நான் உறுதியாக வாக்களிப்பேன், அனைவரும் வாக்களிப்போம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 35 அடி கற்றளவு மற்றும் 15 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட இராட்சத பலூனை வானில் 120 அடி உயரத்தில் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் திரு.க.சிவகுமார், ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
முன்னதாக, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 58 காவலர்கள் தங்களின் தபால் வாக்குகளை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினார்கள். இந்நிகழ்வில், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.காயத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.முத்துக்கிருஷ்ணன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி.சண்முகவடிவு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.க.செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) திருமதி.செ.கலைமாமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment