105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை சுதந்திரம் பெற்றதற்கு பின் முதலாம் ஐந்து ஆண்டு திட்டத்தில் 1948 ஆம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி 1955 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை கட்ட காரணகர்த்தாவாக திகழ்ந்தவர் ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான எம்.ஏ. ஈஸ்வரன் ஆவார்.
கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் உருவாகும் பவானி ஆறு மற்றும் மாயாற்றின் குறுக்கே பவானிசாகர் பகுதியில் கீழ்பவானி திட்டத்தில் அணை கட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஈரோடு பகுதியில் சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த தியாகி ஈஸ்வரனின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணை கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முக்கிய காரண கர்த்தாவாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தியாகி எம்.ஏ. ஈஸ்வரனுக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2022 நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தியாகி எம் ஏ ஈஸ்வரனுக்கு ரூ.2.60 கோடி செலவில் மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதை அடுத்து பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் மணிமண்டபம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தியாகி எம்.ஏ. ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பவானிசாகர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், பவானிசாகர் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மணிமண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் கட்டப்படும் இந்த மணிமண்டபம் 3272 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளதாகவும் இதில் தரைத்தளத்தில் அரங்கம் மற்றும் வரவேற்பு அறை, முதல் தளத்தில் காட்சிக்கூடம், வரவேற்பு ஆறை, அலுவலக அறை, சேமிப்பு கிடங்கு, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், ஆழ்துளைக்கிணறு, கீழ்நிலைத் தொட்டி, மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி, தியாகி எம் ஏ ஈஸ்வரனின் வெண்கல சிலை மற்றும் புல்வெளி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் பழனிச்சாமி, பேரூராட்சி துணைத் தலைவர் வைகுந்தன், தேசிபாளையம் ஊராட்சி தலைவர் முரளிகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகன், சந்திரமோகன், வசந்தா, சரண்யா, கனிதா, விஜயலட்சுமி, சுலோச்சனா உமாசங்கர், தனகோபால், ஒன்றிய கவுன்சிலர் சௌந்தரராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, ஒப்பந்ததாரர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592
No comments:
Post a Comment