சென்னிமலை முருகன் கோயில் வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் உணவு தேடி சென்னிமலை நகரத்திற்குள் வந்து வீடுகளில் உள்ள பொருட்களை நாசம் செய்கின்றன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து சென்று அந்தியூர் வனப்பகுதியில் விட்டுவிட்டு வருகின்றனர். ஆனாலும் இனப்பெருக்கம் காரணமாக குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலை கோயிலுக்கு செல்லும்
பக்தர்களையும் இந்த குரங்குகள் பயமுறுத்துகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக சென்னிமலை அடிவார பகுதியில் ஒரே ஒரு குரங்கு மட்டும் பலரை கடித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை அந்த குரங்கு கடித்துள்ளது. இதில் 7 பேர் சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 17-ந் தேதி ஒரே நாளில் 2 பேரை குரங்கு கடித்துள்ளது.
நேற்று சென்னிமலை பார்க் ரோட்டை சேர்ந்த தர்னீஷ் என்ற 5 வயது சிறுவன் அடிவாரத்தில் இருந்த போது அவனது தலையில் அந்த குரங்கு கடித்ததால் உடனடியாக தர்னீஷ் சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். மனிதர்களை கடித்து அட்டூழியம் செய்யும் குரங்கை பிடிக்க வனத்துறையினர் சென்னிமலை போலீஸ் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுகா.
No comments:
Post a Comment